தலைவா திரை விமர்சனம். - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தலைவா திரை விமர்சனம்.

தலைவா திரை விமர்சனம்.

Written By NIsha on Thursday, August 8, 2013 | 8:50 PM

அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'. அரசியல் கதைகளம் கொண்ட படம், படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன அதனால் தான் ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குடைச்சல்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன. தமிழகத்தில் இப்படி என்றால், இலங்கையில் விஜய், கமல், ரஜனி படங்களை திரையிடவிட மாட்டோம் என்று கொழும்பில் சிங்கள அமைப்பொன்றின் எச்சரிக்கையால் வி.ஐ.பி ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன. இறுதி தருணம் வரையில் படம் வெளியாகுமா என்கின்ற டென்ஷன் ரசிகர்கள் மத்தியில்.

படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்கு ஒரே விசில், ஆர்பாட்டம், சப்தம் என வசனங்களே காதில் விழாத அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம். பதினைந்தாவது நிமிடத்தில் வருகிறார் இளைய தளபதி விஜய். அடுத்த ஐந்து நிமிடங்களில் அரங்கத்தில் 'பின்ட்ராப்' சைலண்ட். பிறகு மெல்ல மெல்ல சப்தங்கள் கூடி ஒரு கட்டத்தில் 'டேய் படத்தை போடுங்கடா' என்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் பொறுமையை மொத்தமாக சோதித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

ஆரம்பமே பாம்பாயில் 1988இல் கலவரம் ஒன்னு காட்டுறாங்க. ஏற்கனவே இருந்த டான் மாதிரியான தலைவர் ஒருவரை போட்டுத்தள்ளி விட்டார்கள் என்று கதை ஆரம்பித்து மீண்டும் பாம்பாயில் வந்து முடிகிறது கதை. வேலுநாயக்கர் கேரக்டர்தான் விஜயின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு. பெயர் மட்டும் மாறியிருக்கிறது 'அண்ணா' என்று. மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார் (சரண்யா கேரக்டராம்). சினம் கொண்ட சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.

தம் மகனான ஐந்து வயது விஸ்வா (விஜய்) வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து, தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்திரேலியா அனுப்பி விடுகிறார்.பிறகு வேலுநாயக்க....ச்சே.. 'அண்ணா' வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார். சத்யராஜ் மகனாக வரும் விஜய்யை சிறுவயது முதலே தன்னை விட்டு தள்ளி தூரத்தில் வளர்த்துவருகிறார். காரணம் தன்னுடைய பிரச்சனைக்குள் மனைவியை இழந்தது போல மகனையும் இழக்கக்கூடாது என்பதனால் தான் பிசினெஸ் செய்கிறேன் என்று கூறி வளர்த்துவருகிறார். அப்படியாக அஸ்ஸ்திரேலியாவில் டான்சராக இருந்துகொண்டு வாட்டர் சப்ளை பிசினெஸும் பார்த்து வரும் விஜய் பாம்பாய் வந்து சத்தியராஜின் இடத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை. அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த கதை தான். ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் இயக்குனர் விஜய் தனித்து தெரிகிறார்.


அஸ்ஸ்திரேலியாவில் அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் பிடிவாதம் பிடிக்க, சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். ஏன்னா இருவரும் சிபிஐயாம்.  கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேக்க தோணுமே... முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை போட்டுத்தள்ளினார் அல்லவா... அவரோட மகன்தான். அப்புறமென்ன அப்பா விட்டுவிட்டுப் போன அந்த பணியை விஜய் தொடர்ந்து செய்ய, கடைசியில் அப்பாவைக் கொன்ன அந்த வில்லனை கொல்கிறார்.

பம்பாய் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு 'பாட்ஷா'வும் நாயகனும் கட்டாயம் ஞாபகம் வந்து தொலைக்கும். ஆனால் துணிந்து அந்த கதைக்களத்தை தெரிவுசெய்து தன்னால் சுவாரசியமாக படத்தை கொடுக்க முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்.

படத்தில் வில்லன்கள் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வீடியோ டேப் யார் கையிலும் கிடைக்காமல் ஒருவனால் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது. அது பிக்பாக்கெட்டுதான் அடிக்கப் பட்டிருக்கும் என்பதை வில்லனும் விஜயும் ஒரு சேர கணிப்பது. அந்த பிக்பாக்கெட் காரனைத் தேடி விஜயும் வில்லனும் ஒரே நேரத்தில் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் போன் பண்ணுகிறார்கள். மைக்ரோ செகன்ட் வித்தியாத்தில் விஜயின் போனை எடுத்துவிடுகிறார் அந்த பிக்பாக்கெட் ஆசாமி. அடுத்த முனையில் வில்லன் டயல் செய்து கொண்டே இருக்கிறான். அதைத் தெரிந்து கொண்ட விஜய் போனை கட் செய்தால் வில்லனின் போனை அட்டென்ட் பண்ணி விடுவானோ என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நமக்கு டென்சன்.

முதல் பாதி தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம். காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் வேறுபடுத்தி கொடுப்பது மிக கடினம் தான். முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. மிக மிக அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் அவுஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார். சந்தானத்தின் காமெடி, அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!நிச்சயமாக விஜய்யினதும் அமலாபாலினதும் வேறுபட்ட நடிப்பை தலைவாவில் காணக்கூடியதாக இருக்கும். 

அங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன. திரைக்கதையை நம்பி இயக்குனர் விஜய் களமிறங்கியிருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் வரும் சத்தியராஜ் செம அழகாக தெரிகிறார். கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளின் சத்தியராஜை காணமுடிந்தது. கருந்தாடி வைத்து கருப்பு தலைமுடியுடன் சண்டையிடுவார் பாருங்கள் அப்படி அபாரமாக இருக்கும்!

இது நம்ம அமலாபாலா என்று கேட்கின்ற மாதிரி அழகை மெருகேற்றி வந்திருக்கிறார். இன்னொரு சுற்று ஆடுவதற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது. சந்தானம் விஜய்யை இமிட்டேட் செய்து கலாய்ப்பதையே தொழிலாக செய்திருக்கிறார் படத்தில். பெரிய ஹீரோக்கள் காமெடியங்களால் கலாய்க்கப்படுவதை விரும்புவதில்லை.ஆனால் விஜய் இடம் கொடுத்திருக்கிறார் என்று சந்தானம் ஒருபேட்டியில் கூறியிருந்தார். அது படத்தில் உண்மை என்று தெரிகிறது.அந்தளவு ஓட்டியிருக்கிறார். சாம் அண்டர்சன் கூட இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார். 

பாடல்களில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும், 'தலைவா' பாடலும், 'யார் இந்த சாலையோரம்', 'தமிழ் பசங்க' பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன. தமிழ் ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்!ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.

படத்தின் குறைகள் என்றால்,படத்தின் நீளம்.மூன்று மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் ஏதாவது சில சந்தர்ப்பங்களில் நீளத்தை உணரவைத்துவிடும்.கதையை விளக்குவதில் மெதுவான காட்சிகள் சற்றே போர்.

இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன், நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ். இரண்டாம் பாதியை ஹரியிடம் கொடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

இடைவேளை வரை எந்த ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம். இடைவேளைக்கு பின் விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஏ.எல்.விஜய் தன்னால் முடிந்ததை இரண்டாம்பாதியில் செய்திருக்கிறார். தமிழக அரசுக்கு இந்த படத்தால் என்ன பிரச்சனை என்று இன்னமும் தான் புரியவில்லை. விஜய் ரசிகர்களுக்கு படம் விருந்து! தெரிந்த கதை-தெரிந்த கதைக்களம் மிக மிக ரிஸ்கான பாத்திரம், நூல் இழை பிசகினால் கூட முழுதாக கவிழ்ந்து விடக்கூடிய படம்ன்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தும் படத்தை இந்தளவுக்கு மெருகேற்றியிருப்பது ஏ.எல்.விஜயின் சாமர்த்தியம்.

மொத்தத்தில் பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது. விஜய்க்கு இன்னொரு ஹிட் நிச்சயம். அது எத்தகைய வெற்றி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதற்கு முதல் படமான துப்பாக்கி ப்ளக்பஸ்டர் ஹிட் என்பதால் அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com