உலகின் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உலகின் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!

Written By NIsha on Friday, September 13, 2013 | 10:38 AM

வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது.

கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது.

இது கடலா ஏரியா?:
உலகிலேயே தரைப்பகுதிக்குள் அமைந்துள்ள மாபெரும் தண்ணீர் மண்டலம் (371,000 சதுர கி.மீ. பரப்பளவு) தான் கேஸ்பியன் கடல். இதை கடல் என்றும் அழைக்கிறார்கள். உலகின் மாபெரும் ஏரி என்றும் சொல்கிறார்கள். இந்த நீரின் உப்புத் தன்மை கடல் நீரின் உப்புத் தன்மையை விட 3ல் ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது.

30 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் இருப்பு:
கடந்த 2000ம் ஆண்டில் தான் இங்கு கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1968ம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் புருடோ பே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் படுகைக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கச்சா எண்ணெய் படுகை இது தான். அதாவது, கடந்த 30 ஆண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய எண்ணெய் படுகை இதுவே.

போட்டா போட்டி:
இதையடுத்து இந்த கச்சா எண்ணெய்யை தோண்டியெடுக்க உலகின் முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களிடையே போட்டா போட்டி ஆரம்பமானது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை போட்டியில் இறங்க என்ன செய்வது என்று தெரியாமல் ஆரம்பத்தில் கஜாகிஸ்தான் கையைப் பிசைந்தது.

கேஸ்பியன் கடலின் சவால்:
மேலும் குளிர்காலத்தில் உறைந்துவிடும் தன்மை கொண்டது கேஸ்பியன் கடல். இங்கு பருவநிலைக்கு ஏற்ப வெப்பநிலை -35 to 40 டிகிரி வரை மாறுபடும் இதைத் தவிர இந்தத் திட்டத்துக்கு அதிநவீன தொழில்நுட்பமும் 116 பில்லியன் டாலரும் தேவைப்படும் என்று தெரியவந்ததையடுத்து பல நாடுகளின் பெட்ரோலிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இந்த பெட்ரோலிய உற்பத்தி பிளான்டை அமைத்தன.

நெதர்லாந்து, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ்:
கஜாகிஸ்தானின் KazMunayGas, நெதர்லாந்தின் ஷெல், பிரான்சின் டோடல், ஜப்பானின் இன்பெக்ஸ், அமெரிக்காவின் எக்ஸ்ஸான் மொபில், கோனாகோ பிலிப்ஸ், இத்தாலியின் எனி ஆகியவை இணைந்து இந்த எண்ணெய் உற்பத்தி மையத்தை அமைத்தன. உலகிலேயே மிகச் சிரமமான இடத்தில், இதுவரை இல்லாத தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி மையம் இது என்கின்றனர்.

சீனாவுக்கு பைப் லைன்:
இடையில் சீன அரசும் ரூ. 30,000 கோடி வரை தந்து, இந்த எண்ணெய் உற்பத்தி மையத்தின் பெரும் பங்குகளை கஜாகிஸ்தானிடம் இருந்து வாங்கிவிட்டது. இங்கிருந்து சீனாவுக்கு பைப் மூலமே கச்சா எண்ணெய் அனுப்பப்படவுள்ளது.

இந்தியாவின் தோல்வி:
இந்த கச்சா எண்ணெய் படுகையில் முதலீடு செய்ய இந்தியாவும் திட்டமிட்டது. இதற்காக இங்கு எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோனாகோ பிலிப்ஸ் நிறுவனத்தில் ரூ. 30,000 கோடி வரை முதலீடு செய்ய இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தயாரானது. ஆனால், சீனாவின் நெருக்கடியால் இந்திய முதலீட்டுக்கு கஜாகிஸ்தான் தடை போட்டுவிட்டது.

லிபியாவுக்கு இணையான எண்ணெய்:
இந்தப் பகுதியில் ஏராளமான ஆழ்குழாய்கள் தோண்டப்பட்டாலும் இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 26,000 பேரல் கச்சா எண்ணெய் தான் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவிலேயே இதன் அளவு நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேரல்களைத் தொடவுள்ளது. இது உலகின் இப்போது தோண்டப்பட்டு வரும் மொத்த கச்சா எண்ணெய்யில் 1.6 சதவீதமாகும். அதாவது லிபியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி சமமானதாக இருக்கும் இந்த ஒரு இடத்தில் தோண்டப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு.

விஷ வாயு அபாயம்:
கேஸ்பியன் கடல் மிகவும் அபாயகரமான கடல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தோண்டப்படும் எண்ணெய் கிணறுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய் மிக மிக அதிகமான அழுத்தத்துடன் வெளியேறுவதும் ஒரு பிரச்சனையாக உள்ளது. மேலும் இந்த கச்சா எண்ணெயில் ஹைட்ரஜன் சல்பைட் விஷத்தன்மை கொண்ட வாயுவின் அளவும் அதிகமாக உள்ளது.

செயற்கைத் தீவுகள்:
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளுடன் இந்த பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பனி உருவாவதைத் தடுக்க எண்ணெய் கிணறுகளைச் சுற்றி ஏராளமான செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தத் திட்டத்துக்காக 41 பில்லியன் டாலர்கள் செலவாகிவிட்டன. மேலும் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளுக்காக 60 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று தெரிகிறது.

மாபெரும் முதலீடும் கஜாகிஸ்தானும்:
இவ்வளவு அதிகமான செலவில் தோண்டப்படும் கச்சா எண்ணெய்யால் இதில் முதலீடு செய்த நிறுவனங்கள் உடனடியாக லாபம் பார்ப்பது சிரமமே என்கிறார்கள். அதே நேரத்தில் இந்த எண்ணெய்யால் கஜாகிஸ்தானின் பொருளாதாரம் விரைவிலேயே சீறிப் பாயும் என்கிறார்கள்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com